'அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 'அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் நவாஸ், மூங்கில் ராமலிங்கம், வடவீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ விஷயங்களில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சீர்காழி
ராணுவ ஆள் சேர்ப்பு முறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சீர்காழியில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாலகுரு, ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் லட்சுமணன் வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சித்ரா செல்வி, மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சிவராமன் ஆகியோர் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.