புதிய பாலப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
குடமுருட்டி ஆற்றில் புதிய பாலப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடந்தது.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை சரிந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அய்யம்பேட்டை வடபுறத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி அய்யம்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது. எனவே புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அது வரை தற்காலிக பாதை அமைத்து தர வேண்டியும் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி சார்பில் அய்யம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பால பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷம் எழுப்பினர்.