மின்வாரியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
நீடாமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து பெண் உயிரிழந்தார். இதனால் மின்வாரியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து பெண் உயிரிழந்தார். இதனால் மின்வாரியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்சாரம் தாக்கி சாவு
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு சொந்தமான வயல் நீடாமங்கலம் வட்டம் நகர் கிராமத்தில் உள்ளது. இவரது வயலில் வலங்கைமான் அருகே உள்ள எருமைப்படுகை கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் மனைவி மீனா (30) களையெடுக்கும் பணியில் நேற்று முன்தினம் காலை ஈடுபட்டார்.அப்போது பம்புசெட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன் சென்ற மீனா அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதனால் மின்சாரம் தாக்கி மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கைக் கண்டித்து நீடாமங்கலம் கோரையாற்றுப்பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் வலங்கைமான் செந்தில்குமார், நீடாமங்கலம் பாலசுப்பிரமணியன், முத்துப்பேட்டை உமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமாதான கூட்டம்
இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சமாதான பேச்சுவாாத்தையில் ஈடுபட்டனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர்கள், மின்வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இறந்த மீனா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும், சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரண உதவியை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.