வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடங்களுக்கு மாற்ற விரும்பினால் தகவல் தெரிவிக்கவேண்டும்


வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடங்களுக்கு மாற்ற விரும்பினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
x
தினத்தந்தி 24 Sept 2022 5:15 AM IST (Updated: 24 Sept 2022 5:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடங்களுக்கு மாற்ற விரும்பினால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தர்மபுரி

வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடங்களுக்கு மாற்ற விரும்பினால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்து கேட்பு கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எதிர்வரும் சிறப்பு சுருக்க திருத்தம்-2023 தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் தர்மபுரியில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,479 வாக்குச்சாவடிகள், 860 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்கனவே அமைந்துள்ளன. இவற்றில் ஏதேனும் புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாற்றுதல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்வதற்காக விவரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக கோரிக்கை மனுக்களும் வழங்க வேண்டும். இந்த கருத்துக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ரேஷன் கடையில் படிவங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தாமாக முன்வந்து ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு 6பி படிவம் வைக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 6பி படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து மீண்டும் ரேஷன் கடை பணியாளர்களிடமே வழங்கலாம். அதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன் (தர்மபுரி), விஸ்வநாதன் (அரூர்) கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தார் சவுகத் அலி மற்றும் தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story