ஆனந்த விநாயகர் கோவில் குளத்தில் மாசடைந்து காணப்படும் தண்ணீர்
மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவில் குளத்தில் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. குளத்தில் கழிவுநீர், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவில் குளத்தில் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. குளத்தில் கழிவுநீர், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனந்த விநாயகர் கோவில் குளம்
மன்னார்குடி ஒத்தை தெருவில் பிரசித்தி பெற்ற ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வழக்கம்.
கோவிலுக்கு அருகில் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் மாசடைந்து பாசிகளால் மூடப்பட்டு கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து முற்றிலும் அசுத்தமான நிலையில் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கை கால் கழுவ கூட இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாசடைந்த தண்ணீர்
கோவிலுக்கு அருகிலேயே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கிருந்து வெளியாகும் கழிவுநீர் இந்த குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாகவும், இதனால் இந்த குளத்தில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதும் வாடிக்கையாக உள்ளதாகவும், கோவில் குளத்தில் தண்ணீர் அசுத்தமாகி உள்ளதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த குளத்தின் அருகிலேயே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. இந்த குளத்தின் கரைகளில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதாலும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.இந்த கோவில் குளத்தை சீரமைத்து கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்பது தான் பக்தர்கள் மற்றும் இப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தூய்மையாக பராமரிக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சிவகணேஷ் கூறுகையில், இந்த குளம் நீண்ட காலமாக மாசடைந்து உள்ளது. அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. செத்த மீன்களை அகற்றினாலும்.
குளத்தில் கழிவு நீரை அப்புறப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். அதேபோல குளத்தில் கழிவு நீரை அகற்றிவிட்டு புதிததாக தண்ணீர் தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.