பாலியெஸ்டர் ஆடை தயாரிப்பில் முனைப்பு காட்டினால் திருப்பூர் மீளும்
பாலியெஸ்டர் ஆடை தயாரிப்பில் முனைப்பு காட்டினால் திருப்பூர் மீளும் , தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
பனியன் தொழில் மூலம் டாலர் சிட்டி என்ற அந்தஸ்தை திருப்பூர் பெற்றது. உள்நாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியை எட்டியது. வெளிநாட்டு வர்த்தகம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் சென்றது. பின்னலாடை தொழில் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. இதன்காரணமாகவே தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை அள்ளி வழங்கி வந்தது.
தொழில் முடக்கம்
திருப்பூரில் தங்கியிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வந்தார்கள். இந்தநிலையில் நூல் விலை உயர்வு காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டது. பனியன் தொழிலாளர்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை வரை தொடர்ச்சியாக வேலை நடந்து, பண்டிகைக்கு முன்பு போனஸ் வழங்கப்படும். ஆனால் உள்நாட்டு பனியன் வர்த்தகத்தை பொறுத்தவரை கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி பனியன் வியாபாரம் என்பது திருப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருந்தது.
ஆர்டர்கள் இல்லாமல் வழக்கத்தை விட 10 சதவீதம் அளவுக்கே ஆடை உற்பத்தி நடந்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தயாரித்து இருப்பு வைத்திருந்த ஆடைகளையே வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்தனர்.
புதிய ஆர்டர் வருகை குறைவு
புதிய ஆடை தயாரிப்பு மிகவும் குறைந்ததால் தொழிலாளர்களும் வேலையிழப்பை சந்தித்தனர். அந்தந்த பனியன் நிறுவனங்களின் நிலைமையை கருத்தில்கொண்டு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் முழுமையாக திருப்பூருக்கு திரும்பாமல் இருக்கிறார்கள்.
காரணம் தீபாவளி பண்டிகைக்கு பிறகாவது ஆர்டர்கள் வரும். வேலை நடக்கும். தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தொழில்துறையினர் முதல் தொழிலாளர்கள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி புதிய ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. 25 சதவீத நிறுவனங்களே இயக்கத்துக்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் தேசிய வாரிய உறுப்பினரும், லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளருமான எம்.மோகனசுந்தரம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. பில் கட்டாயம்
நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டு பனியன் வர்த்தகம் தீபாவளிக்கு முன்பு வரை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பிறகு புதிய ஆர்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்டர் வருகை சூடுபிடிக்கவில்லை. இதுஒருபுறம் இருக்க ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையை மாநகரில் தீவிரப்படுத்தி விட்டார்கள். அதாவது ஆடைகள் தயாரித்து அனுப்பும்போது ஜி.எஸ்.டி. பில் ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் சிலர் முறைப்படி ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் வர்த்தகம் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.பில் சோதனையை அதிகாரிகள் கடுமையாக்கிவிட்டனர். உரிய பில் இருந்தால் மட்டுமே சரக்கை அனுப்பும் நிலை ஏற்பட்டது.
பருத்தி ஆடைகளை தயாரித்து வழங்கிய திருப்பூர் மாநகரம், நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் பருத்தி ஆடைகளின் தயாரிப்பு செலவு அதிகரித்தது. அதனால் பாலியெஸ்டர் ஆடைகளின் விற்பனை அதிகரித்தது. உற்பத்தி செலவு குறைவு காரணமாக பாலியெஸ்டர், டெரிகாட்டன் ஆடைகள் ஆக்கிரமிக்க தொடங்கின.
இளம் தலைமுறையினர் மாற்றம்
தற்போதைய இளம் தலைமுறையினர் உள்ளாடைகள் முதல் டி-சர்ட், பேண்ட் வரை நவீன வடிவமைப்பு ஆடைகளை விரும்பதொடங்கி விட்டனர். பாக்கெட் ஜட்டி, ட்ரங்ஸ் போன்ற ஜட்டிகள் விற்பனை குறைந்தது. தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப ஆடை வடிவமைப்பை மாற்றி, மார்க்கெட்டில் எந்த ஆடைகளுக்கு மவுசு உள்ளது என்பதை திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் நன்கு கவனித்து ஆடை தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.
இந்திய அளவில் தற்போது பாலியெஸ்டர் ஆடைகளின் விற்பனை அதிகரித்து விட்டது. உள்நாட்டுசந்தையிலும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. லூதியானா, சூரத், ஆகமதாபாத் போன்ற பகுதிகளில் பாலியெஸ்டர் துணிகளை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலியெஸ்டர் ஆடைகளின் தயாரிப்பு செலவு 25 சதவீதம் குறைவு. அதை அணிவதில் இளைஞர்கள் நாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூரில்உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் பாலியெஸ்டர் ஆடை தயாரிப்புக்கு மாற வேண்டும்.
பாலியெஸ்டர் ஆடை உற்பத்தி
இந்திய சந்தையில் எந்த ஆடைகள் அதிகம் விற்பனையாகிறது என்பதை கவனித்து அதை உற்பத்தி செய்வது அவசியம். பருத்தி ஆடை தயாரிப்பில் தான் திருப்பூருக்கு பெயர் கிடைத்தது. பழமையையே நினைத்துக்கொண்டிருக்காமல், தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை அறிந்து பாலியெஸ்டர் ஆடை தயாரிப்பில் இறங்கினால்தான் திருப்பூரில் ஆடை தயாரிப்பு அதிகரிக்கும். வெளிமாநில ஆர்டர்களும் திருப்பூருக்கு வரும். தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பாலியெஸ்டர் ஆடை தயாரிப்புக்கான கட்டமைப்புகள் திருப்பூரில் அதிகம்உள்ளதால் எவ்வித சிரமத்தையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பனியன் உற்பத்தியாளர்கள் முனைப்புடன் பாலியெஸ்டர் ஆடை உற்பத்தியை தொடங்கவேண்டும்.
மார்க்கெட் நிலவரம் அறிய வேண்டும்
தற்போது திருப்பூரில் 20 சதவீதம் நிறுவனங்கள் பாலியெஸ்டர் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் பாலியெஸ்டர் ஆடைகள் தயாரிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய ஆர்டர்கள் கேரளாவை நோக்கி செல்கிறது. விளையாட்டு வீரர்களின் ஆடைகள் தயாரிப்பும் திருப்பூரை விட்டு, மற்ற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டது. இனியும் காலம் கடத்தாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத்தினர் பாலியெஸ்டர் ஆடை தயாரிப்புக்கு மாற வேண்டும்.
திருப்பூரில் உள்ள உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொழில் அமைப்பினர், இந்திய ஜவுளி சந்தையின் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். மார்க்கெட்டில் எந்த ஆடைகள், எந்தவிதமான வடிவமைப்பு ஆடைகள் விற்பனையாகிறது என்பதை அறிந்து அந்த ஆடை தயாரிப்பில் இறங்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர்களை அழைத்து பயிற்சி வகுப்பு நடத்தி புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். டிசம்பர் மாதம் தான் ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலியெஸ்டர் ஆடை தயாரிப்பில்
முனைப்பு காட்டினால் திருப்பூர் மீளும்
இது தொடர்பாக வால்ரஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜி.பி.எஸ். டேவிட் கூறும்போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பூரில் பாலிெயஸ்டர் துணிகளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது உலக அளவில் பாலிெயஸ்டர் ஆடைகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 890 ஆயிரம் டன் பாலிெயஸ்டர் துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகத்திலேயே வியட்நாம், சைனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் அதிகமாக பாலிெயஸ்டர் துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி பாலியஸ்டர் ஏற்றுமதியில் வியட்நாம் முதல் இடத்திலும், சைனா 2-ம் இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி திருப்பூர் வால்ரஸ் நிறுவனம் இந்தியாவின் பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திருப்பூரை இந்தியாவின் பாலிெயஸ்டர் சந்தையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வரும் 5 ஆண்டுகளில் வியட்நாமை பின்னுக்குத்தள்ளி, பாலிெயஸ்டர் ஏற்றுமதியில் இந்தியாவும், திருப்பூரும் முதலிடத்தை எட்டி பிடிக்கும் என்றார்.