ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
கீழ்வேளூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பாலிடெக்னிக் மாணவர்
நாகை மாவட்டம் நாகூர் மியான் தெருவை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவரது மகன் நாஜிம் என்கிற நாஜி மரைக்கார்(வயது 17). இவர், நாகை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் பாட பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் ஒரு ஆட்டோவில் நாகூரை சேர்ந்த தனது நண்பர்கள் 5 பேருடன் ஆற்றில் குளிப்பதற்காக கீழ்வேளூர் அருகே உள்ள எரவாஞ்சேரி ஊராட்சி மேல ஒதியத்தூர் ஓடம்போக்கி ஆற்று சட்ரஸ் பகுதிக்கு வந்துள்ளார்.
ஆற்றில் மூழ்கி சாவு
அங்கு குளித்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக சட்ரஸ் பகுதியில் உள்ள பாசிபடர்ந்த பகுதியில் நாஜி மரைக்கார் கால் வழுக்கி விழுந்து ஆற்று தண்ணீரில் மூழ்கினார்.
இதைக்கண்ட அவருடன் வந்த நண்பர்கள் ஆற்றில் விழுந்தவரை காப்பாற்றி சிகிச்சைக்காக கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நாஜி மரைக்கார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
இது குறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார், அரசு ஆஸ்பத்திரியில் இருந்த நாஜி மரைக்கார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் நாகூரில் சோகத்தை ஏற்படுத்தியது.