தாராளமாக புழங்கும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள்
தஞ்சையில் அரசு உத்தரவை மீறி பாலித்தீன் பைகள் தாராளமாக புழங்குகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் அரசு உத்தரவை மீறி பாலித்தீன் பைகள் தாராளமாக புழங்குகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பாலித்தீன் பைகளுக்கு தடை
தமிழகத்தில் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது. ஆனால் தஞ்சை மாவட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டாலும் இன்னும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் கள்ளச்சந்தையில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்வதோடு, கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள்.
பயன்பாடு அதிகரிப்பு
இருப்பினும் அரசு உத்தரவை மீறி தஞ்சையில் சாலையோர கடைகள், இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் புழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மக்கும் தன்மை கொண்ட பைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதற்கு ஆகும் செலவை காட்டிலும் பாலித்தீன் பைகளுக்கு செலவு குறைவு என்பதால் பாலித்தீனை அதிக அளவு பயன்டுத்தி வருகிறார்கள்.
பாலீத்தீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்குவதில்லை. இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. இதை உணராமல் பலர் பாலித்தீனை தொடர்ந்து பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருகிறார்கள். சில கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்தாலும், வாடிக்கையாளர்களிடம் இது தொடர்பான விழிப்புணவு இல்லாததால் அவர்கள் பாலித்தீன் பைகளையே கேட்கின்றனர். பாலித்தீன் பைகள் இல்லை என்று கூறினால், அவர்கள் வேறு கடைக்கு செல்லும் நிலை உள்ளதால் வியாபாரம் பாதிக்கிறது என வியாபாரிகள் கூறுகிறார்கள்.