ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்ய பொம்மிகுப்பம் ஊராட்சி தேர்வு
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொம்மிகுப்பம் ஊராட்சி ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு கலெக்டர் மற்றும் எம்.பி. ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.
பொம்மிகுப்பம் ஊராட்சி
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொம்மிகுப்பம் ஊராட்சியில் ஷாஜி திட்டத்தின் கீழ் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றனர். நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி.பேசுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊராட்சியை தேர்வு செய்து சுமார் ரூ.5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாய் வரை ஊராட்சிக்கு நிதிபெற்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொம்மிகுப்பம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
30 நாட்களுக்குள் நடவடிக்கை
கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-
முன்மாதிரி கிராமத் திட்டத்தின் மூலமாக கிராமங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி, பொதுக்கிணறு, பால்பண்ணை, நல்ல பள்ளிக்கூடங்கள், விவசாயிகள் மேலாண்மை, நல்ல கல்வி, பெண் குழந்தைகளுடைய வளர்ச்சி போன்ற அனைத்து துறைகளிலும் பொதுமக்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதுதான் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் நோக்கம். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், சாதி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு, வங்கி கடன் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொழில் முனைவோர்களை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் அனைத்து திட்டங்களையும் அறிந்து பயன்பெற வேண்டும். இன்று பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இடுப்பொருட்கள்
பின்னர் 11 நபர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., நல்ல தம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் செல்வராசு, திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் பூங்காவனம், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் நன்றி கூறினார்.