கழுதை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்


கழுதை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்
x

கொள்ளிடம் அருகே கழுதை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வாய்க்கால் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம், ஜூன்.18-

கொள்ளிடம் அருகே கழுதை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வாய்க்கால் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கழுதை வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்ல விநாயகபுரம் கிராமத்தில் பாசன சந்தன வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து நல்ல விநாயகபுரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், ஆலாலசுந்தரம், மாணிக்கவாசல், புத்தூர், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வசதி அளித்து வடிகால் வசதியும் கொடுத்து வரும் முக்கிய வாய்க்காலாக கழுதை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமத்தில் நல்லூர் உப்பனாற்றில் கலந்து வங்க கடலில் சங்கமிக்கிறது.

தூர்வாரும் பணி

இந்த வாய்க்கால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இதைத்தொடர்ந்து வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. கடந்த வருடம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாய்க்கால் தூர்ந்து போயிருந்தது. கிராம விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரில் சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் மேற்பார்வையில் கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் பாசன ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கழுதை வாய்க்காலை நல்லவிநாயகபுரம் கிராமத்தில் பொக்லின் எந்திரம் கொண்டு தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை தொடங்கினார். தற்போது கழுதை வாய்க்கால் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

3 ஆயிரம் ஏக்கர்

இதுகுறித்து நல்ல விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-கழுதை வாய்க்கால் இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலை தூர்வாரி ஆழ்படுத்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதன்பேரில் இந்த வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு எளிதில் பாசன வசதி கிடைக்கும். அதிக அளவில் மழை பெய்தாலும் நீரை எளிதில் இந்த வாய்க்கால் வெளியேற்றி சென்று நல்லூரில் உள்ள உப்பனாற்றில் எளிதில் கலக்க செய்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story