பச்சை நிறமாகிய கும்பகோணம் பொற்றாமரை குளம்


பச்சை நிறமாகிய கும்பகோணம் பொற்றாமரை குளம்
x

பாசி படர்ந்ததால் பச்சை நிறமாகிய கும்பகோணம் சாரங்கபாணி கோவில் பொற்றாமரை குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

பாசி படர்ந்ததால் பச்சை நிறமாகிய கும்பகோணம் சாரங்கபாணி கோவில் பொற்றாமரை குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொற்றாமரை குளம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகரில் சிறப்பு மிக்க பல கோவில்கள் உள்ளன. இதன்காரணமாக கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த சிறப்பு வாய்ந்த வைணவ தலமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது. மகாமக குளத்தை அடுத்து பிரசித்தி பெற்ற குளமாக இது திகழ்கிறது. பிரளய காலத்தில் அமிர்தம் விழுந்த இடமாக கும்பகோணம் மகாமக குளமும், பொற்றாமரை குளமும் திகழ்கின்றன.

தெப்ப உற்சவம்

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சாரங்கபாணி கோவிலில் தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெறும். இதற்காக 30 அடி, நீள அகலத்தில் தெப்பம் செய்யப்பட்டு அதில் சாமியை வைத்து குளத்தை சுற்றி வருவார்கள்.கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கும்பகோணம் பொற்றாமரை குளத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த பொற்றாமரை குளத்தின் தற்போதைய நிலையோ பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

பச்சை நிறம்

பொற்றாமரை குளத்தில் குறைந்த அளவு நீர் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நீர் முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொற்றாமரை குளம் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து பாசி படர்ந்து காணப்பட்டால் துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது.எனவே பிரசித்தி பெற்ற பொற்றாமரைக் குளத்து தண்ணீரில் படர்ந்துள்ள பாசியை அகற்றி விட்டு நீர் நிரப்ப வேண்டும் என்பதும், குளத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என்பதும் பக்தர்களின் வேண்டுகோளாகும்.


Next Story