மண்பானைகளில் பொங்கலிடுவோம் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை-இல்லத்தரசிகள் கருத்து


மண்பானைகளில் பொங்கலிடுவோம் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை-இல்லத்தரசிகள் கருத்து
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:37+05:30)
தர்மபுரி

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.

பொங்கல் பரிசு

அரசு தரப்பில் ரூ.1,000 பரிசும், கரும்புடன் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்து தர்மபுரி மாவட்ட இல்லத்தரசிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பானை விற்பனை

பாலக்கோட்டை சேர்ந்த மண்பானை வியாபாரி வினோத்:-

பொங்கல் விழாவை முன்னிட்டு தற்போது மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. நாங்கள் சாதாரண வகை பானைகளை விற்பனை செய்கிறோம். ரூ.60 முதல் ரூ.250 வரை பல்வேறு விலைகளில் பானைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சாதாரண வகை பானைகள் தான் பொங்கலுக்கு விற்பனை அதிகமாக இருக்கும். இப்போது பொது இடங்களில் பொங்கல் வைப்பதற்காக பொங்கல் பானைகளை வாங்கி செல்கின்றனர். வீடுகளில் பெரும்பாலும் புதிய பானைகளில் தான் பொங்கல் வைக்கிறார்கள். எனவே அடுத்த 2 நாட்களில் பானை விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சர்க்கரைப் பொங்கல்

தும்பலஅள்ளியை சேர்ந்த இல்லத்தரசி பேபி:-

இப்போது பொங்கல் பண்டிகை, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் போட்டு சாமி கும்பிட்ட பின்னர் பொங்கல் சாப்பிடுவதோடு முடிந்து விடுகிறது. நம்முடைய முன்னோர்கள் கொண்டாடியது போன்று பொங்கல் திருநாளை கொண்டாடி நம்முடைய கலாச்சாரத்தை பேணிக் காக்க வேண்டும். வீடுகளில் குழந்தைகளுக்கு பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து எடுத்து கூற வேண்டும். இளைஞர்களிடம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான ஆர்வம் குறைந்துவிட்டது என்று பொதுவாக கூற முடியாது.

பண்பாடு

பி.செட்டிஅள்ளியை சேர்ந்த விவசாயி முத்துசாமி:-

பொங்கல் விழா தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் அறுவடைப் பண்டிகையாகும். உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், விவசாயம் செய்யும் உழவர்களுக்கும், உழவு பணிக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் குறைந்துவிட்டது. இந்த பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வரும் காலங்களில் இந்த கலாசாரத்தை வளர்க்கும் விதத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

பொங்கல் செல்பி

பள்ளி மாணவி சவுமியபிரியா:-

கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் எங்களை போன்ற மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. பொங்கல் பண்டிகை அன்று வேட்டி, சட்டை, புத்தாடை அணிந்து, பெற்றோர்கள் வைக்கும் பொங்கல் பானை, கரும்புகளுடன் செல்பி எடுத்து வாட்ஸ்-அப்பில் போட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடுகிறோம். பொங்கல் 3 நாட்கள் கொண்டாட்டமாக இருப்பதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருக்கும் உறவினர்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த கிராமங்களுக்கு வருகிறார்கள். இந்த கொண்டாட்டத்தை பற்றிய நினைவுகளை புதுப்பித்து கொள்ள செல்பி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு நவீன தொழில்நுட்பம் மூலம் நமக்கு இப்போது கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கியாஸ் அடுப்பில் பொங்கல்

இல்லத்தரசி சுகுணா:-

கிராமப்புறங்களில் பொங்கல் தினத்தன்று புது அரிசியில் பொங்கல் பொங்கி, சூரியனுக்கு படையல் செய்வதுடன், மஞ்சள் தோரணங்கள் கட்டி, கரும்பு உண்டு பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். பெரிய நகர பகுதிகளில் பல வீடுகளில் கியாஸ் அடுப்பில் பொங்கலை வைத்து முடித்து கொள்கின்றனர். இது ஏற்புடையதாக இல்லை. பொங்கல் பண்டிகையை அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும். நகர்ப்புற இளைஞர்களுக்கு பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து எடுத்து கூறி சிறப்பாக கொண்டாடுவதற்கான ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

விஜய் படமா? அஜித் படமா?

கல்லூரி மாணவர் சந்தோஷ்:-

பொங்கல் பண்டிகை 3 முதல் 4 நாள் கொண்டாட்டமாக உள்ளது. வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பின்னர் இளைஞர்களின் கவனம் விளையாட்டு மற்றும் சினிமா மீது திரும்புகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு ரஜினி-கமல் படங்கள் வந்தால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என்று கூறுவார்கள். இப்போது அஜித்-விஜய் ஆகியோரின் படங்கள் பொங்கல் பண்டிகை நேரத்தில் வெளியாகியுள்ளன. இதனால் இளைஞர்களின் கவனம் அந்த படங்களை பார்க்க வேண்டும் என்பதில் திரும்புகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் சினிமா தியேட்டர்களுக்கு செல்வது கணிசமாக குறைந்தது. இப்போது பண்டிகை காலங்களில் மீண்டும் சினிமா தியேட்டர்களை நோக்கி இளைஞர்கள் செல்கிறார்கள். இதுவும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரு பகுதி என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story