தென்காசி, நெல்லை மாவட்டங்களில் வாகனங்களில் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்ற மக்கள்
தென்காசி , நெல்லை மாவட்டங்களில் வாகனங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி சீர்வரிசை பொருட்களை பொதுமக்கள் கொண்டு சென்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வாகனங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி சீர்வரிசை பொருட்களை பொதுமக்கள் கொண்டு சென்றனர்.
பொங்கல் பண்டிகை
தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் மற்றும் சென்னையில் இந்த திருநாளில் பொங்கல் சீர்வரிசை, பொங்கல்படி என்பது மகளுக்கு பெற்றோர், பெற்றோர் இல்லாத சகோதரிகளுக்கு சகோதரர்கள் வழங்கு வது பெருமைக்குரியதாகும். பொங்கல்படியில் திருமணமான பெண்ணிற்கு தாய் வீட்டில் இருந்து பொங்கல் அன்று அந்தப் பெண் பயன்படுத்தக்கூடிய அரிசி, கரும்பு, பருப்பு, சர்க்கரை, காய்-கனிகள், கிழங்கு வகைகள், பனங்கிழங்கு, மஞ்சள் குலை மற்றும் பொங்கல் வைப்பதற்காக பானைகள், விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பே சென்று கொடுப்பார்கள். புதுமண தம்பதிகளுக்கு மட்டும் இப்படி சீர்வரிசையை நேரில் கொண்டு செல்கிறார்கள்.
இன்னும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் படி கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
வாகனங்களில்
தற்போது இந்த வழக்கம் சற்று மாறி உள்ளது. சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூரில் உள்ள மகள் மற்றும் சகோதரிக்கு பொங்கல் படி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதை பணமாக கொடுத்து வருகிறார்கள்.
இன்னும் இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் உங்கள் அப்பா பொங்கல்படி கொண்டு வந்துவிட்டாங்களா? உங்கள் அண்ணன் பொங்கல்படி கொண்டு வந்தார்களா? என்று சுற்றத்தார் கேட்பதும், அதற்கு பெண்கள் பெருமிதத்துடன் பதிலுரைப்பதும் காண்பதற்குரிய மகிழ்ச்சியை வழங்குகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி நெல்லையில் கரும்பு, காய்கறிகள், பனங்கிழங்கு மஞ்சள்குலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதனால் நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டுகளில் இருந்து வேன், கார், லோடு ஆட்டோக்களில் கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
லோடு ஆட்டோ
அதிக அளவில் லோடு ஆட்டோக்களில் தான் பொங்கல் படி கொண்டு செல்லப்பட்டது. இதைப்ேபால் தென்காசி மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்து பலர் தங்களுடைய மகள்களுக்கு பொங்கல்படி ஆட்டோ, வேன், கார்களில் கொண்டு சென்றனர்.