மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல்
தர்மபுரி உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உதவி நிர்வாக அலுவலர்கள் மஞ்சு நாதேஸ்வரன், முனியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
விழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி கரும்பு, மஞ்சள் கொலை மற்றும் பூஜை பொருட்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையங்கள்
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமை தாங்கி, புதுபானையில் பொங்கலிட்டு, பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, கரும்பு, மஞ்சள் கொலை வைத்து, புதுப்பானையில் பொங்கல் சமைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி தலைமை தாங்கி, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இதில் போலீசார்உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாலக்கோடு பேரூராட்சி
பாலக்கோடு பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் 5 புதுப்பானைகளில் பொங்கலிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 18 வார்டுகளில் உள்ள பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது வீடுகளின் முன்பு வண்ண பொடிகளால் கோலங்களை வரைந்தனர்.
இதில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் 3 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.4 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் 3 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் 3 பேருக்கும், ஆறுதல் பரிசாக ரூ.1,000 மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் 40 பேருக்கும் வழங்கப்பட்டன.
பரிசுகள்
இந்த பரிசுகளை பேரூராட்சி தலைவர் முரளி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து ஆகியோர் பெண்களுக்கு வழங்கினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் முருகன், பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, இன்ஸ்பெக்டர் தவமணி, ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா, கவுன்சிலர்கள் சாதிக்பாஷா, ஹசினா, பத்தேகான், ருஹித், லட்சுமி, தீபா, ஆயிஷா, சரவணன், ஜெயந்தி, பிரேமா, சிவசங்கரி, நாகலட்சுமி, மோகன் மற்றும் பேரூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இதாயத்துல்லா, பா.ஜனதா மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத்தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.