அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
சங்கரன்கோவில் அரசு கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் வேணுகோபால் வரவேற்றார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'சங்கரன்கோவில் தொகுதியில் நிலத்தடி நீரை அதிகரிக்க மரக்கன்றுகள் வளர்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்து சங்கரன்கோவில் பகுதியை செழிப்புள்ள பகுதியாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது சங்கரன்கோவில் தொகுதியில் 30 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டு உள்ளன' என்றார்.