கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா


கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா
x

காவல்துறை சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர், டி.ஐ.ஜி. பங்கேற்றனர்.

வேலூர்

பொங்கல் விழா

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

விழாவில் 23 போலீஸ் நிலையங்கள் சார்பில் 23 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட போலீசார் அனைவரும் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து கலந்து கொண்டனர்.

மல்லர் கம்பம்

மைதானத்தில், பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் குடிசை வீடு, உரல், கயிறு கட்டில், மாட்டுவண்டி உள்ளிட்டவை கண்காட்சியாக வைத்திருந்தனர். இதை ஏராளமானோர் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கரகாட்டம், மாணவ, மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதைத் தொடர்ந்து ஓடி விளையாடு பல்நோக்கு பயிற்சி மையத்தின் சார்பில் சாகச விளையாட்டான மல்லர் கம்பம் நடந்தது.

இதில் சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளி கட்டினர். இது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறுவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது.


Next Story