பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாவில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் 34 முழுநேர ரேஷன் கடைகளும், 2 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. இதேபோல் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் 524 முழுநேர ரேஷன் கடைகளும், 504 பகுதி நேர ரேஷன் கடைகளும், சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் 30 முழுநேர ரேஷன் கடைகளும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1,094 ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
டோக்கன் வழங்கும் பணி
கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கீழ்புதூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் அலுவலர்கள், விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர். அப்போது வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பொங்கலுக்கான பரிசு தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க வருகிற 8-ந் தேதி வரை வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும். ஜனவரி 9-ந் தேதி முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் வாரியாக பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,60,063 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்க உள்ளது.
8-ந் தேதிக்குள்...
தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த தாலுகாவில் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கி வருகிறார்கள். வருகிற 8-ந் தேதிக்குள் அனைவருக்கும் டோக்கன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.