பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. கந்திகுப்பத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. கந்திகுப்பத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் கந்திகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-ம் ஆண்டு தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன் பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.1,000 அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சமூக இடைவெளி

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 1,058 ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் 36 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,094 ரேஷன் கடைகளில் உள்ள 5,58,934 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 338 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 5,59,272 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.61 கோடியே 93 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வருகிற 13-ந் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story