தருமபுரி மாவட்டத்தில் 99 சதவீத ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்-கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 99 சதவீத ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1,000 பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்திலும் கடந்த 9-ந் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 463 முழுநேர ரேஷன் கடைகள், 572 பகுதிநேர கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 42 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,077 ரேஷன் கடைகளில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 4,65,867 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்கள் என மொத்தம் 4,66,594 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
90 சதவீதம்
தர்மபுரி தாலுகாவில் 74 ஆயிரத்து 368 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், நல்லம்பள்ளி தாலுகாவில் 59 ஆயிரத்து 242 ரேஷன் கார்டு தாரர்களுக்கும், பாலக்கோடு தாலுகாவில் 67 ஆயிரத்து 297 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், காரிமங்கலம் தாலுகாவில் 52 ஆயிரத்து 673 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பென்னாகரம் தாலுகாவில் 73 ஆயிரத்து 455 ரேஷன் கார்டு தாரர்களுக்கும், அரூர் தாலுகாவில் 61 ஆயிரத்து 82 ரேஷன் கார்டு தாரர்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் 78 ஆயிரத்து 477 ரேஷன் கார்டு தாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 99 சதவீத ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கலெக்டர் சாந்தி கூறியுள்ளார்.