4½ லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


4½ லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x

வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 584 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பு

பொது வினியோக திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கம், முழு கரும்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

பொது வினியோக திட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அன்னபூர்ணா அட்டைகள், முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அட்டைகள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உள்பட வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 49 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பரிசு தொகுப்பு தொடர்ந்து வழங்கிட ரேஷன் கடைகளுக்கு வருகிற 13-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கலாம்...

பொங்கல் பரிசு தொகுப்பு ஒரே நேரத்தில் வழங்கப்படும் போது நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் தெரு வாரியாக நாளொன்றுக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்வதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு இன்று முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பதற்றம் இன்றி நெரிசல் ஏற்படாத வகையில் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ-மெட்ரிக் முறையில் விற்பனை முனையத்தின் மூலமாக வழங்கிடவும், அங்கீகாரச்சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்கள் பெறும் அட்டைதாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை 0416-2252586 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

உரிய நடவடிக்கை

அதேபோன்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர்-9445000904, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்-7338749600, மாவட்ட வழங்கல் அலுவலர்-9445000184, கூட்டுறவு சங்கங்களின் பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர்-7338749605 மற்றும் அந்தந்த தாலுகா வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்களிடம் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம். அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story