7¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


7¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,651 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 85 ஆயிரத்து 758 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கனை நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை கார்கான தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை ஒவ்வொரு நியாய விலைகடைகளிலும் ஒரு நாளைக்கு 200 பேருக்கு வழங்கும் வகையில் கூட்டுறவு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜெயம், துணைப்பதிவாளர்கள் ஆரோக்கியராஜ், வசந்தலட்சுமி, திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story