தமிழக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப்பணமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தமிழக அரசு வழங்க இருப்பது  பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப்பணமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

தமிழக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப்பணமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்

திருநெல்வேலி

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்துவருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.

பொங்கல் பரிசு

அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரைக் கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது.

ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

கசப்பான அனுபவம்

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் மனநிலை

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-

பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரிசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம்.

எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.

இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது.

எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பணமாக வழங்க வேண்டும்

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த குடும்பத்தலைவி ஜெயசுதா:-

கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பொருட்கள் தரமானதாக இல்லை. எனவே, பொங்கல் பரிசை பணமாகவே பொதுமக்களுக்கு கொடுத்து விடுவது நல்லது. அந்த பணத்தை கொண்டு தங்களுக்கு விருப்பமான கடைகளுக்கு சென்று தரமான, தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்வார்கள். கொரோனா காலத்தில் நிவாரண நிதி வழங்கியது போல் ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி குறிப்பிட்ட நாட்களில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும்.

தருவை கிராமத்தைச் சேர்ந்த விமலா:-

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். எனவே, இந்த ஆண்டு அரசு பொங்கல் பரிசாக தரமான பொருட்களுடன் பணமும் வழங்க வேண்டும்.

மேலச்செவலை சேர்ந்த கார்த்திகா:-

அரசு பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது ஏழை-எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, தரமான பொங்கல் பொருட்கள் வழங்குவதுடன் பணமும் வழங்க வேண்டும்.

தரமான பொருட்கள்

தென்காசி களக்கோடி தெருவை சேர்ந்த பாண்டிசெல்வி:-

பொருட்களாக கொடுத்தால் சரியான அளவு கிடைப்பது இல்லை. தரமாகவும் இருப்பது இல்லை. பணமாக கொடுத்தால் நாங்களே தரமான பொருட்களை வாங்கிக் கொள்வோம்.

தென்காசி தைக்கா தெருவை சேர்ந்தஒய்.ஜி.மாரியப்பன்:-

அரசு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்தால், அதனை அனைவரும் திருப்திப்படும் வகையில் தரமாகவும், சரியாகவும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பொருட்களுக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்துரைசாமிபுரத்தை சேர்ந்த செல்வரதி:-

நாங்கள் மிகக்குறைந்த சம்பளத்தில் தினசரி பீடி சுற்றி தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கியது. இது எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. எங்களை போன்ற ஏழை-எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினோம். எனவே, அரசு பொங்கல் தொகுப்புக்கு பதிலாக, முன்பு போல் ரூ.2,500 வழங்க வேண்டும்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டைச் சேர்ந்த மோகன்சிங்:-

பொருட்கள் கொடுக்கும்போது, பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைப்பது இல்லை. எனவே, அரசு பொங்கல் பொருட்களுடன் பணமும் வழங்க வேண்டும்.

முத்தையாபுரத்தை சேர்ந்த கவிதா மாதவன்:-

கடந்த அ.தி.மு.க. அரசு பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தார்கள். இதனால் பொங்கலை மிகவும் சந்தோஷமாக கொண்டாடினோம். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்தபோது, பல பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. எனவே, பொங்கல் பொருட்களுடன் பணமும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

------------------------------

'விவசாயிகளிடம் அரசு நேரடியாக

கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்'

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயி செல்வராஜ் கூறுகையில், 'விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 200 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு உள்ளோம். ஒரு ஆண்டாக கரும்பு பயிரை வளர்த்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் வந்து எங்களிடம் கரும்புகளை வாங்கி சென்று ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவார்கள். இதன்மூலம் விவசாயிகளுக்கு பெரும்பாலும் லாபம் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை கரும்பு கொள்முதலுக்கு அரசு அதிகாரிகளும் வரவில்லை. மற்ற வியாபாரிகளும் வரவில்லை.அரசு கொள்முதல் செய்யாவிட்டால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். தனியாரிடம் கரும்புகளை விற்பனை செய்தால், வெட்டுகிற கூலி கூட கிடைக்காது. எனவே, தமிழக அரசு பொங்கலுக்கு விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்' என்றார்.


Next Story