3¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு


3¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3¼ லட்சம் குடும்ப அட்டைகளுக்கு...

பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறும் அட்டைதாரர்களாகிய முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அரிசி அட்டைதாரர்கள், அன்னபூர்ணா அட்டைகள் மற்றும் முதியோர் ஓய்வுதிய திட்டத்தின்கீழ் அரிசி பெறும் அட்டைகள், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் உள்பட திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 744 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தினை வருகிற 9-ந் தேதி அன்று முதல்வர்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். 13-ந் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9-ந் தேதி முதல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரே நேரத்தில் வழங்கப்படும்போது ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில் சுழற்சி முறையில் தெரு வாரியாக நாளொன்றுக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்வதற்கான அட்டவணை தயார் செய்யப்படும். அதன்படி 9-ந் தேதி முதல் பொங்கல்தொகுப்பு வழங்கப்படும்.

எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் நெரிசல் ஏற்படாத வகையில் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்குச் சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து ரேஷன் கடைகளிலும், பயோ-மெட்ரிக் முறையில் விற்பனை முனைத்தின் மூலமாக வழங்கிடவும், அங்கீகாரச்சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருள்கள் பெறும் அட்டைதாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் ஒப்பம் பெற்று பொங்கல் தொகுப்பு வழங்கிடவும், பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ அல்லது கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04179-222111 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story