ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பெற்றது மகிழ்ச்சி; பொதுமக்கள் கருத்து


ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பெற்றது மகிழ்ச்சி; பொதுமக்கள் கருத்து
x

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பெற்றது மகிழ்ச்சி என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு


ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பெற்றது மகிழ்ச்சி என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.1,000 ரொக்கம்

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி வாங்கும் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பணம் மற்றும் பொருட்கள் வாங்கிச்சென்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 538 அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கு 1,170 கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் தொகுப்புடன் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 வேட்டி-சேலைகளும் வழங்கப்பட உள்ளன.

கீதா

ஈரோடு கொல்லம்பாளையம் வண்டிக்காரன் தோட்டத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவருடைய மனைவி கீதா என்பவர் கூறியதாவது:-

எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தினசரி வேலை கிடைக்காததால் குடும்பம் நடத்தவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் சிரமப்பட்டு வருகிறேன். இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 வழங்கியதுடன், அரிசி-சர்க்கரையும் முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். இது இந்த சூழலில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜமாணிக்கம்

தாயுமானவர் வீதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் கூறியதாவது:-

நான் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். மனைவிக்கு உடல் நலம் சரி இல்லாததால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் அளித்து உள்ள ரூ.1,000 எனக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. பொங்கல் பண்டிகையை சிரமமின்றி எங்கள் குடும்பம் கொண்டாடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமாயி

மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமாயி கூறியதாவது:-

எனது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு கூலி வேலைக்கு சென்று வாழ்ந்து வருகிறேன். எனது மகள் திருமணம் முடிந்த பிறகு, இந்த ஆண்டு என்னுடன் பொங்கல் கொண்டாட வேண்டும். குடும்பத்துடன் வரும் அவளுக்கு நல்ல முறையில் பொங்கல் வைத்து கொடுக்க என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். முதல்-அமைச்சர் ரூ.1,000 வழங்கி, எனது கவலையை போக்கி விட்டார். இப்போது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாறு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பெற்ற அனைவரும் மகிழ்ச்சியுடன் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி சென்றனர்.


Next Story