புதுமண தம்பதிகளுக்கு சீர் கொடுக்க படையெடுக்கும் பெற்றோர்


புதுமண தம்பதிகளுக்கு சீர் கொடுக்க படையெடுக்கும் பெற்றோர்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:15:45+05:30)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமணமான புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க பெற்றோர்களும், சகோதரர்களும் படையெடுத்து செல்கின்றனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமணமான புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க பெற்றோர்களும், சகோதரர்களும் படையெடுத்து செல்கின்றனர்.

பொங்கல் சீர்

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் பொங்கல் பண்டிகை இன்றளவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் தை பொங்கல், மாட்டுப்பொங்கல், கனு பொங்கல் என கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையின்போது கடந்த ஓர் ஆண்டில் திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அவர்களுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் இன்றளவும் கிராம பகுதிகளில் அதிகளவில் நடந்து வருகிறது.

அவ்வாறு வழங்கும் பொருட்களை வைத்தே புதுமண தம்பதிகள் பொங்கல் வைத்து வழிபடுவர். இந்த சீதனம் அதோடு முடிவதில்லை. தங்கள் வசதிக்கேற்ப ஆண்டுதோறும் பெற்றோரோ அல்லது சகோதரர்களோ திருமணமாகி சென்ற தங்கள் மகளுக்கு, சகோதரிகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் பொங்கல் சீர் வரிசைகளை ஆட்டோ அல்லது பிற வாகனங்களில் உறவினர்களுடன் வந்து கொடுத்து செல்கின்றனர்.

மன மகிழ்ச்சி

திருமணமாகி புகுந்த வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைத்து பொருட்களும் வாங்கி வைத்திருந்தாலும் தனது பெற்றோர் வீட்டு பொங்கல் சீர்வரிசையை வாங்கி அதில் சிறிது பொருளையாவது பொங்கலில் சேர்த்து பொங்கல் இட்டால்தான் அந்த பெண்களுக்கு மனதில் முழு மகிழ்ச்சி இருக்கும். இந்த வகையில் எஸ்.புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் செய்வதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சர்க்கரை பொங்கல் வைப்பதற்காக புதிய மண்பானைகள், வெண்கல பானைகள், மண் பானை அடுப்புகள், பச்சரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் கொத்து, புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதோடு இரண்டு, மூன்று கரும்பு கட்டுகளை வாங்கி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தங்கள் மகள் அல்லது சகோதரிகளை திருமணம் முடித்து கொடுத்த வீட்டிற்கு படையெடுத்து செல்வதை பார்க்க முடிந்தது. இதுபோன்ற சீர்வரிசைகள்தான் உறவுகளுக்கு பாலமாக இன்றும் நீடித்து வருகிறது என்றே சொல்லலாம்.


Next Story