பொங்கல் விளையாட்டு போட்டிகள்2 ஆண்டுகளுக்கு பிறகு ரேக்ளா
திருவாரூரில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. 2 ஆண்டுகளுக்கு பிறகு ரேக்ளா பந்தயம் நடந்தது.
திருவாரூரில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. 2 ஆண்டுகளுக்கு பிறகு ரேக்ளா பந்தயம் நடந்தது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் சிலர் தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இதனால் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று முன்தினம் விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த மாடுகளை அலங்கரிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை அலங்கரித்து வழிபட்டனர். வீட்டில் கால்நடைகள் இல்லாதவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
விளையாட்டு போட்டிகள்
இவ்வாறு பொங்கல் பண்டிகை களை கட்டிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே விளையாட்டு போட்டி உற்சாகமாக நடந்தது.
இந்த போட்டியில் திருவாரூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பெண்களுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் (வயது வாரியாக), சைக்கிள் போட்டி, இசை நாற்காலி என ஏராளமான போட்டிகள் நடந்தன.
நீச்சல்- சைக்கிள்
ஆண்களுக்கான நீச்சல் போட்டி, சைக்கிள் போட்டி, ஓட்டப்பந்தயம் ஆகியவை வயது வாரியாக நடத்தப்பட்டன. ரேக்ளா பந்தயமும் நடந்தது. சிறிய, நடுத்தர, பெரிய என 3 பிரிவுகளாக குதிரைகள் பிரிக்கப்பட்டு ரேக்ளா பந்தயம் நடந்தது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் காலை 11 மணிக்குள் பதிவு செய்து கொண்டனர். நீச்சல் போட்டிக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்களை மட்டுமே அனுமதித்தனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அடையாள அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டனர். மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ரேக்ளா
திருவாரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு வந்தது. இதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் வருவார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரேக்ளா பந்தயம் நடைபெறவில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று குதிரை ரேக்ளா பந்தயம் நடந்ததது. இந்த போட்டியை கட்டிடங்களின் மாடியில் நின்றும், சாலையோரங்களில் நின்றும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.