கடும் பனிப்பொழிவு காரணமாக சத்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு; மல்லிகைப்பூ கிேலா ரூ.2,890-க்கு ஏலம்
கடும் பனிப்பொழிவு காரணமாக சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ஒரு கிேலா ரூ.2 ஆயிரத்து 890-க்கு ஏலம் போனது.
புஞ்சைபுளியம்பட்டி
கடும் பனிப்பொழிவு காரணமாக சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ஒரு கிேலா ரூ.2 ஆயிரத்து 890-க்கு ஏலம் போனது.
பூக்கள் சாகுபடி
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும்.
பின்னர் இங்கிருந்து ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கும் மற்றும் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
மல்லிகைப்பூ ரூ.2,890
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2,890-க்கும், முல்லை ரூ.2,150-க்கும், காக்கடா ரூ.1,400-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், கோழி கொண்டை ரூ.100-க்கும், ஜாதிமுல்லை ரூ.1,500-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், அரளி ரூ.30-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.130-க்கும் ஏலம் போனது.
இதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2,205-க்கும், முல்லை ரூ.1,200-க்கும், காக்கடா ரூ.1,075-க்கும், செண்டுமல்லி ரூ.74-க்கும், கோழி கொண்டை ரூ.78-க்கும், ஜாதிமுல்லை ரூ.1,100-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.685-ம், முல்லைப்பூ ரூ.950-ம், காக்கடா ரூ.325-ம் அதிகரித்திருந்தது.
விலை உயர்வு
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூ 1000 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் ஏற்படும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
மேலும் தொடர்ந்து 3 நாட்கள் முகூர்த்தம் என்பதாலும் மல்லிகை பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 890-க்கு விற்பனையானது' என்றனர்.
மேலும் கணிசமாக அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.