ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி அமாவாசையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

ஆடி அமாவாசை

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சின்ன முதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோவில் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், சாமி திருவீதி உலாவும் நடந்தது. பின்னர் பக்தர்கள் வயிற்றின் மீது வாழைக்காய் வைத்து வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றிலை அலங்காரம்

ராசிபுரத்தில் நாமக்கல் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்பட 11 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 21 ஆயிரம் வெற்றிலைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல் மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர் மாரியம்மனுக்கு ஆடி அமாவாசையையொட்டி காய்கனி அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் நவலடி கருப்பண்ணசாமி, காளியம்மன், அசலதீபேஸ்வரர், வெங்கட்ரமண பெருமாள், காந்தமலை பாலதண்டாயுதபாணி, சுண்டக்கா செல்லாண்டியம்மன், ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன், எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

வெண்ணந்தூர், பரமத்திவேலூர்

வெண்ணந்தூர் தங்கசாலை வீதி செல்வ மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. இதேபோல் நாமகிரிப்பேட்டையில் உள்ள மாரியம்மன், பெருமாள், முருகன் மற்றும் மெட்டாலா ஆஞ்சநேயர், ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணி, காமாட்சி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

பாண்டமங்கலம்‌ அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் உள்ள அரசாயியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்திவேலூர் மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், ‌‌ நன்செய்இடையாறு ராஜா சுவாமி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story