4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் காளைக்கு சிறப்பு பூஜை-சமாதிக்கு பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பாலாபிஷேகம்
கிருஷ்ணகிரி:
4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் காளையின் சமாதிக்கு ஊர்வலமாக பொதுமக்கள் சென்று சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் செய்தனர்.
கோவில் காளை
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னகழனி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காளை ஒன்று தானமாக வழங்கப்பட்டது.
அந்த கோவில் காளையை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகையின் போது எருது விடும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இந்த கோவில் காளை பங்கேற்று வந்தது.
இறந்தது
கிராம மக்கள் சாமியாக வணங்கி வந்த இந்த கோவில் காளை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நிலை குறைவால் உயிர் இழந்தது. இதனால் சோகம் அடைந்த பொதுமக்கள் கோவில் காளையை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே கிராமத்தின் மையப்பகுதியில் நல்லடக்கம் செய்தனர். அத்துடன் முக்கிய திருவிழா பண்டிகை காலங்களில் உயிரிழந்த காளைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவில் காளையின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க தேங்காய், பூ, பழம், மஞ்சள், குங்குமம், வெல்லம் மற்றும் பூஜை பொருட்களுடன் கோவில் காளை சமாதிக்கு ஊர்வலமாக சென்றனர்.
நெகிழ்ச்சி
அங்கு அமைக்கப்பட்டுள்ள சமாதிக்கு மஞ்சள், குங்குமம், மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். அமைதி வேண்டியும், நோய் நொடிகள் நீங்கவும், மழை வேண்டியும், கிராம மக்கள் வணங்கி சிறப்பு பூஜை செய்தனர். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தின்னகழனி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இன்றைய உலகில் மனிதர்கள் உயிரிழந்தால் ஒரு சில ஆண்டுகளில் மறந்து விடும் நிலையில், கோவில் காளைக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து நினைவு அஞ்சலி செலுத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.