கிருஷ்ணகிரியில், மகாளய அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


கிருஷ்ணகிரியில், மகாளய அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:45 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மகாளய அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்கள் முன்னதாகவே மகாளய பட்ச காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டு வீடு தேடி வந்து, தர்பணத்தை ஏற்று ஆசீர்வதித்து திரும்பி செல்வார்கள் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாத அமாவாசை அன்று தர்பணம் செய்வது 14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்ததற்கான பலனை கொடுக்கிறது. அன்றைய நாள் கோவிலுக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் வாங்கி கொடுப்பதும் கோடான கோடி புண்ணியத்தை கொடுப்பதாக நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இதையொட்டி கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து பசுவிற்கு வெல்லம் கலந்த அரிசி, அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை வழங்கி வழிபட்டனர். மேலும் வீடுகளில் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து வழிபாடு செய்தனர்.

அதேபோல் கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதா, ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் கோவில், சங்கரமடம் ஆகியவற்றில் தங்களது முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள்.

கோவில்களில் சிறப்பு பூஜை

மகாளய அமாவாசையையொட்டி பழையபேட்டை அங்காளம்மன், புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் மற்றும் ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story