ரூ.57 கோடியில் புதுப்பொலிவு பெறும் பூம்புகார் சுற்றுலா வளாகம்
பூம்புகார் சுற்றுலா வளாகம் ரூ.57 கோடியில் புதுப்பொலிவு பெற உள்ளது. அங்கு சுற்றுச்சுவர், கடற்கரையில் நடைபாதை-வரவேற்பு அலுவலக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார் சுற்றுலா வளாகம் ரூ.57 கோடியில் புதுப்பொலிவு பெற உள்ளது. அங்கு சுற்றுச்சுவர், கடற்கரையில் நடைபாதை-வரவேற்பு அலுவலக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் பழம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். இது பண்டைய தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் ஒரு காப்பியம் என்றால் மிகை ஆகாது. அதாவது பண்டைய தமிழர்களின் அரசாட்சி முறை, வாழ்வியல் தத்துவம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, விழா எடுத்தல், விருந்து உபசரிப்பு, சிறப்பிக்கும் விதம், இயற்கை உணவுகளை உட்கொள்ளுதல், உடல் பராமரிப்பு, கடவுள் வழிபாடு உள்ளிட்ட எண்ணற்ற வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கியதுதான் இந்த காப்பியம் ஆகும்.
மற்ற காப்பியங்களைப் போல இல்லாமல் இந்த காப்பியத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நடைமுறையில் வாழ்ந்தவர்களால் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றி தான் இன்றளவும் அரசாட்சி, மக்களாட்சி, வாழ்வியல் தத்துவங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மிகப்பெரிய துறைமுகம்
தற்போது இந்த காப்பியத்தின் அறிவுரைகளை கடைபிடிக்காத காரணத்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு, பெருவெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக கரிகாலன் தான் கட்டிய கல்லணையில் இருந்து அரசின் தலைநகரமான பூம்புகார் வரை சாலை அமைத்து இரு புறங்களிலும் மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்துள்ளார். தமிழர்களால் போற்றி பாதுகாத்து வருகின்ற சிலப்பதிகாரம் தோன்றிய மண் பூம்புகார் ஆகும். முன்னொரு காலத்தில் பூம்புகாரில் கண்ணகி பிறந்து கோவலனை மணமுடித்து வாழ்ந்து வந்தார்.
அந்த காலகட்டத்தில் பூம்புகார் மிகப்பெரிய துறைமுக பட்டினமாக விளங்கியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இங்கே காணப்பட்ட துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து உணவு பண்டங்கள் கப்பல்கள் மூலம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பூம்புகார் நகரம் கடல் சீற்றத்தால் மூழ்கி விட்டதாகவும், இதனை அறிய சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் துறை சார்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் பண்டைய பூம்புகார் கடலில் உள்ளதாகவும், தற்போதும் கட்டிடங்கள் கடலுக்கு அடியில் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சிலப்பதிகார கலைக்கூடம்
மிகவும் புராதனமான பூம்புகாரை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் சிகரமாக கடந்த 1973-ம் ஆண்டு பண்டைய பூம்புகார் நகரத்தை நினைவு படுத்தும் விதமாக அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் சிலப்பதிகார கலைக்கூடம் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதில் ஏழு நிலை மாடம் கொண்ட சிலப்பதிகாரத்தை நினைவுபடுத்தும் விதமாக கலைக்கூடம் அமைக்கப்பட்டது. இந்த கூடத்தில் பண்டைய சிலப்பதிகாரத்தை நினைவுபடுத்தும் விதமாக கல்வெட்டுகள் மூலம் பூம்புகாரின் பெருமைகளை பறை சாற்றி உள்ளது. மேலும் நெடுங்கள் மன்றம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பல்வேறு சிற்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தந்து பார்வையிட்டனர்.
பராமரிப்பின்றி காணப்பட்டது
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் சுற்றுலா வளாகம் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து விட்டது. மேலும் தமிழர்களின் பெருமையை வெளிக்காட்டும் சிலப்பதிகார கலைக்கூடம் சேதமடைந்து காணப்பட்டது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம் புதிய பொலிவு பெறும் என்ற நம்பிக்கை பூம்புகார் பகுதி மக்களிடையே ஏற்பட்டது. இதற்கு ஏற்றார் போல அப்போதைய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூம்புகாருக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சரிடம் கோரிக்கை
பூம்புகார் சுற்றுலா வளாகம், சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதன்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் சுற்றுலா வளாகத்தை இரண்டு கட்டமாக சீரமைத்திட ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கு பூம்புகார் பகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
2-ம் கட்ட பணிகள் தொடங்கப்படும்
இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறுகையில் பூம்புகார் சுற்றுலா பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக ரூ.23 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சுற்றுச் சுவர், கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு நடை பாதை, வரவேற்பு அலுவலகம் உள்ளிட்ட பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அவ்வப்போது பார்வையிட்டு தக்க அறிவுரைகளை வழங்கி வருகிறார். முதற்கட்ட பணிகள் முடிவடைந்த உடன், 2-வது கட்டப்பணிகள் தொடங்கப்படும் என்றார்.
பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும்
பூம்புகார் சுற்றுலா வளாகம் ரூ.57 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று புதுப்பொலிவு பெற உள்ளது. இதில் சிலப்பதிகார கலைக்கூடத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.