பூம்புகார் உலகத்தர சுற்றுலா தலத்திற்கு இணையாக மாற்றப்படும்
சிலப்பதிகார கலைக் கூடத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பூம்புகார் உலகத்தர சுற்றுலா தலத்திற்கு இணையாக மாற்றப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
திருவெண்காடு:
சிலப்பதிகார கலைக் கூடத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பூம்புகார் உலகத்தர சுற்றுலா தலத்திற்கு இணையாக மாற்றப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளாக நடக்கவில்லை
பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று இந்திர திருவிழா என்று அழைக்கப்படும் சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த விழாவை நடத்த வேண்டும் என பூம்புகார் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து இந்திர திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்திர திருவிழா
இதை தொடர்ந்த தமிழக அரசு இந்திர திருவிழாவை நடத்த உத்தரவிட்டது. அதன்படி சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு பூம்புகாரில் இந்திர திருவிழா நடந்தது.
இந்த விழாவிற்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் வரவேற்றார்.
பூம்புகார் உலகத்தர சுற்றுலா தலமாக மாற்றப்படும்
கலெக்டர் மகாபாரதி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- பூம்புகார் சரித்திர புகழ்பெற்ற பகுதியாகும். தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் பூம்புகாரில் தான் தோன்றியது. புண்ணிய பூமியான இங்கு சிலப்பதிகார கலைக்கூடம் அமைந்துள்ளது. இதனை மேம்படுத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.23 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இன்னும் 18 மாதங்களில் உலகத்தரத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றாக பூம்புகார் திகழும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கலை நிகழ்ச்சிகள்
விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ராமலிங்கம் எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் காவேரி பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.