பஸ் வசதியின்றி குமுளியில் பரிதவித்த தமிழக பக்தர்கள்
மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள் போதிய பஸ் வசதியின்றி குமுளியில் பரிதவித்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குமுளி வழியாக ஜீப்களிலும், நடந்தும் கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். அதுபோல் கூடலூர் அருகே பள்ளியன்குடி வழியாகவும் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் நடந்து சென்றனர். இந்த இரு பாதை வழியாகவும் கோவிலுக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். பளியன்குடி வழியாக பகல் 11.30 மணி வரையும், குமுளி வழியாக பகல் 2.30 மணி வரையும் கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு குமுளியில் இருந்து போதிய பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாலை 5 மணியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குமுளி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். சிறப்பு பஸ்கள் வராததால் வழக்கமாக பிற நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு பக்தர்கள் ஏறினர். மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் தங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்குமாறு அங்கு பணியில் இருந்த போலீசார் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன்பிறகு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றிலும் பக்தர்கள் முண்டியடித்து ஏறினார். குழந்தைகளுடன் வந்தவர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.