பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார் - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடி,
ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
இதற்கு, பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்' என்றார்.
காட்பாடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும், ஆந்திர அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாகவும், அணை கட்டுவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை விரைவுபடுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், திமுக அரசு பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் செளபே கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "யாரோ விவரம் தெரியாத மந்திரி அவர். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை, எங்கள் கொள்கையும் அதுவல்ல' என்றார்.