உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை
பல்லடம் அருகே அறிவொளி நகரில் திருப்பூர் ஜம்மனை பள்ளம், சங்கிலிப் பள்ளம் ஆகிய பகுதிகளில் ஓடைப் புறம்போக்கில் வசித்த 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1½ சென்ட் இடம் வழங்கப்பட்டது. இதில் அவர்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப வீடுகள் கட்டிக் கொண்டனர். இதில் ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள 200 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க மின் வாரியத்தினர் தடையில்லா சான்று வேண்டும் என்று கேட்பதாகவும், இது குறித்து தாலுக்கா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் சான்று வழங்கப்படவில்லை. இதனால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக வந்த அறிவொளி நகர் வார்டு உறுப்பினர் சையது ஒளி பானு மற்றும் பொதுமக்களிடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மந்தை புறம்போக்கு நிலம் என்று ஆவணங்களில் உள்ள வீடுகளுக்கு கால்நடை துறை அதிகாரிகளுடன் வரும் 2-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தாசில்தார் தெரிவித்ததை அடுத்து சமாதானமடைந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், தண்ணீர்பந்தல் நடராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற துணை தலைவர் செல்லத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.