அங்கன்வாடி ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திப்பு போராட்டம் நேற்றுமுன்தினம் மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கியது. மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார்.
அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். உள்ளூர் மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் பணிச்சுமையை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இரவு வரை ரோட்டோரம் அமர்ந்து இருந்தனர். அதன்பிறகு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். விடிய, விடிய அங்கேயே இருந்தனர்.
அதன்பிறகு நேற்று காலை முதல் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து மதிய உணவு அங்கேயே சாப்பிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் சென்னையில் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். மாலை 4 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.