பொரியல் தட்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
உடுமலை பகுதியில் பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாற்றுப் பயிர்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் சின்ன வெங்காயம், தக்காளி, பீட்ரூட், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பல விவசாயிகள் ஒரே நேரத்தில் சாகுபடி மேற்கொள்ளும் போது இந்த காய்கறிகளின் வரத்து அதிகரித்து விலை குறைவு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக மாற்றுப்பயிர்கள் சாகுபடியில் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தட்டைப் பயறு, பீன்ஸ் போன்ற பயறு வகை இருந்த போதிலும் கேரள மக்களால் அதிக அளவில் பொரியலுக்கு பயன்படுத்தப்படும் பொரியல் தட்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ஆண்டியக்கவுண்டனூரை சேர்ந்த விவசாயி ரங்கசாமி கூறியதாவது:-
அனைத்து விதமான பருவநிலைகளிலும் சாகுபடி செய்யக்கூடிய பயிர் ரகமாக பொரியல் தட்டை உள்ளது. அதிலும் நீளமான காய்கள் கொண்ட வழக்கமான ரக பொரியல் தட்டையே கேரள மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது.
வேறு ரகமாக இருந்தால் சந்தையில் விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் சரியான ரகத்தை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டியது அவசியமாகும்.
இயற்கை முறை
பொரியல் தட்டையைப் பொறுத்தவரை விதைத்து 45 முதல் 50 நாட்களில் அறுவடை செய்யத் தொடங்கலாம். உடுமலை சந்தையிலிருந்து பொரியல் தட்டையை உள்ளூர் வியாபாரிகளை விட கேரள மாநிலம் மூணார், மறையூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளே அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ பொரியல் தட்டை ரூ.20-க்கு விற்பனையாகிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது பாதி விலைக்கு விற்பனையானாலும் கட்டுப்படியாகக் கூடிய விலை என்பதால் பாதிப்பு இல்லை. ஒரு ஏக்கரில் தினமும் 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் எடுக்க முடியும். ஆனால் முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்வதால் பூச்சிகளின் தாக்குதல் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனால் மகசூல் குறைந்தாலும் இயற்கை முறையில் விளைவிக்கும் போது சுவை அதிகமாக இருப்பதுடன் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.