கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்


கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
x
திருப்பூர்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிருமுருகன்பூண்டிநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

திருமுருகன்பூண்டி நகராட்சியில் வரி விதிப்பு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கதிர்வேல், மகேஸ்வரி, கோகிலா, லீலாவதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். நகராட்சியில் வரிவிதிப்பு செய்ய வேண்டும். அத்தியாவசிய பணிகளை காலதாமதம் செய்யாமல் மேற்கொள்ள வேண்டும். மின்வாரியத்திற்கு படிவம் 7-ல் கையெழுத்திட வேண்டும். புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணாவில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவரவில்லை. இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி பொறுப்பு கமிஷனர் மோகன்குமார் செல்போன் மூலமாக தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது. இதன் பின்னரே தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பரபரப்பு

நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் இருக்கும் நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும், நகராட்சி துணைத் தலைவரான ராஜேஸ்வரியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story