பரிசாக கார் விழுந்ததாக தபால் அனுப்பி கடலூர் கல்லூரி மாணவியிடம் ரூ.22½ லட்சம் அபேஸ் மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு


பரிசாக கார் விழுந்ததாக தபால் அனுப்பி  கடலூர் கல்லூரி மாணவியிடம் ரூ.22½ லட்சம் அபேஸ்  மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரிசாக கார் விழுந்ததாக தபால் அனுப்பி கடலூர் கல்லூரி மாணவியிடம் ரூ.22½ லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த 22 வயதுடைய மாணவி, கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இவர் ஆன்லைன் செயலி மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3.2.2022 அன்று அவருக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலில், உங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளது. அந்த காரை பெறுவதற்கு ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகள் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரூ.22½ லட்சம் அனுப்பினார்

இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி, அந்த தபாலில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் இனிக்க, இனிக்க மர்மநபர் பேசியுள்ளார். அவர் கூறியது அனைத்தும் உண்மை என்று நம்பிய மாணவி, அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு 4 தவணைகளில் பணம் அனுப்பினார். ஆனால் மர்மநபர் கூறியபடி, பரிசாக கார் கொடுக்கவில்லை. இதனால் மாணவிக்கு அந்த மர்மநபர் மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவரது செல்போனை தொடர்பு கொண்டு, தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், மேலும் ரூ.3 லட்சம் கட்டினால் அந்த பணத்தை மீண்டும் உங்களிடம் திருப்பி தந்து விடுவேன் என்று கூறி உள்ளார். இதை நம்பிய அவர் அந்த பணத்தை அனுப்பி உள்ளார். இவ்வாறு பல தவணைகளில் ரூ.22 லட்சத்து 50 ஆயிரத்து 100 அவரது வங்கி கணக்கிலும், ஆன்லைன் மூலமாகவும், அந்த மர்ம நபருக்கு அனுப்பி உள்ளார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இந்த பணத்தை அந்த கல்லூரி மாணவி, ஓய்வு பெற்ற ஆசிரியரான தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து எடுத்து அனுப்பினார். அந்த பணத்தை பெற்ற மர்ம நபர், அதன்பிறகு கல்ளலூரி மாணவியை தொடர்பு கொள்ளவில்லை. கல்லூரி மாணவி அந்த மர்ம நபரை தொடர்பு கொண்டால், அந்த நபர் செல்போனை சுவிட்சு ஆப் செய்துள்ளார்.

இது பற்றி மாணவி, கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவியிடம் ரூ.22½ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story