தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு- தள்ளாடுகிறதா தபால்துறை?-மனம் திறக்கிறார்கள் மக்கள்


தனியார் கூரியர் நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு-  தள்ளாடுகிறதா தபால்துறை?-மனம் திறக்கிறார்கள் மக்கள்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.

தபால்காரர் ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கிராமத்து தெருக்களில் வருவார். சில காகிதங்களை கையிலும் பையிலும் வைத்திருப்பார். அவருக்குத்தான் எத்தனை மரியாதை?

கடுதாசிகள்

அன்புள்ள அம்மா, அப்பா நலம் நலமறிய அவா... என்று பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்ற பெற்ற பிள்ளைகள் எழுதிய கடுதாசிகள். அதற்காக நாளும் காத்துக்கிடந்த பெற்றோர்கள். அன்பு மனைவிக்கு ஆசையுடன் அத்தான் எழுதிக்கொள்வது என்னவென்றால்... என்று எல்லையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள், ஏக்கங்கொண்ட மனைவியர்களுக்கு எழுதிய மடல்கள்.

அன்புள்ள மான்விழியே... என்று காதலர்கள் வரையும் காதல் கடிதங்களுக்காக காத்திருந்த காதலிகள். அவர்களின் பதில்களை எதிர்நோக்கி பார்த்திருந்த காதலர்கள். இப்படி காத்து இருப்பவர்கள் எல்லாம் அந்த பழைய சைக்கிள்காரரைத்தான் தேடி எதிர்பார்த்து இருப்பார்கள்.

அவர் கொண்டுவருவது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியான (டெலகிராம்) தகவலாகவும் இருக்கலாம்.

தலைகீழ் மாற்றம்

இப்போது நிலை தலைகீழாகிவிட்டது. வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் சைக்கிள் இல்லாத தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றன.

முன்பு எல்லாம் விழாக்காலங்களில் தபால் பெட்டிகள் வயிறு நிரம்பி, வாய்வழியே வாழ்த்து கடிதங்கள் எட்டிப்பார்க்கும். இப்போது திறந்துபார்த்தால் வறியவர் வயிறு போல் வற்றிப்போய் ஒன்று இரண்டு கடிதங்களே உள்ளே கிடக்கின்றன. தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் தபால்துறைக்கு சவாலாக வளர்ந்துவிட்டன.

இந்த போட்டிகளில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள, தபால் துறையும் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.

தரமான சேவை

இதுபற்றி தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் செல்வகுமார் கூறும்போது, ''தபால் துறைக்கு தனிநபர் கடிதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வரும் வாழ்த்து அட்டைகள் குறைந்தாலும் அதற்கு ஈடாக பாஸ்போர்ட்டு, வங்கிச்சேவை, ஆதார் அட்டைக்கான பணிகளை சிறப்பாக அளிக்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்'' என்றார்.

''பதிவு தபால் சேவை 5 சதவீதமும், விரைவு தபால் சேவை 15 சதவீதமும் அத்துடன் வணிக நிறுவனத் தபால்களும் அதிகரித்துள்ளன. மாநிலம் முழுவதும் 1,459 தபால் துறை மையங்கள் மூலம் கடந்த ஆண்டு 18 லட்சம் ஆதார் அட்டைக்கான பயன்பாட்டு பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு வரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 564 பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. பொதுமக்களின் மாறாத நம்பிக்கையுடன் அவர்களுக்கு தரமான சேவையை தபால்துறை தொடர்ந்து செய்து வருகிறது'' என்றும் அவர் சொன்னார்.

ஆங்கிலேயர் நடைமுறை

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் ஏ.இஸ்மாயில்:-

தபால்துறை பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, இந்திய தபால் பேமென்ட் வங்கி மூலம் டிஜிட்டல் சேவையை பொதுமக்கள் பெற்று வருகிறார்கள்.

ஆதார் அட்டை, ஆயுள் சான்றிதழ் வழங்குவது, வங்கி, மின்வாரியம், தொலைத் தொடர்புத்துறை தொடர்பான பணிகளையும் தபால் நிலையங்கள் செய்து வருகின்றன.

1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் தபால் நிலையங்களை திறக்கும் போது, கிராமிய தபால் நிலையங்களை புறநிலை தபால் நிலையங்களாக நிர்வகித்தனர். அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் கிளை தபால் நிலையங்களில், 1.26 லட்சம் தபால் அலுவலகங்கள் கிராமங்களில் இருக்கின்றன. சுமார் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். துறைக்கான மொத்த வருவாயில் 75 சதவீதத்தை அவர்கள் தேடித்தருகிறார்கள். ஆனால் அவர்கள் ஓய்வுபெறும் போது வெறும் ரூ.1.50 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த வரை கிருஷ்ணகிரியில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும் 39 துணை தபால் அலுவலகங்களும், 262 கிராமப்புற தபால் அலுவலகங்களும் உள்ளன. தபால் அலுவலகங்களுக்கு வந்த சிலர் தங்களது கருத்துகளை தங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.


Next Story