தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், அஞ்சலக துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும், ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அஞ்சலக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி பெரம்பலூரில் தலைமை தபால் அலுவலகம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தபால்துறை சங்க (என்.எப்.பி.இ.) ஸ்ரீரங்கம் கோட்டத்தின் நிதி செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் உதவி செயலாளர் சுரேஷ், கோட்ட நிர்வாகிகள் செல்வகணேசன், சரவணன், மோகன்ராஜ் மற்றும் பெரம்பலூர் பகுதி அஞ்சல் ஊழியர்கள் கலந்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 251 அஞ்சலக ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 90 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் சேவை பாதிக்கப்பட்டது.