பசும்பொன் தேவர் படத்துடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மீண்டும் 'போஸ்டர்'-சேலத்தில் பரபரப்பு
பசும்பொன் தேவர் படத்துடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மீண்டும் ‘போஸ்டர்’ ஒ்ட்டப்பட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கிடையே இருவரது ஆதரவாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் பரபரப்பான வாசகங்கள் இடம்பெறுவதும் உண்டு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சூரசம்ஹாரம் போஸ்டர் ஒட்டப்பட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேசிய மக்கள் இயக்கம் என்ற பெயரில் சேலம் மாநகர் முழுவதும் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அரசியல் மோதலுக்கு மத்தியில் சமூக ரீதியில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் அ.தி.மு.க.வினர் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.