சென்னை மருத்துவ கல்லூரியின்விடுதி இடமாற்றத்துக்கு முதுகலை மாணவர்கள் எதிர்ப்பு


சென்னை மருத்துவ கல்லூரியின்விடுதி இடமாற்றத்துக்கு முதுகலை மாணவர்கள் எதிர்ப்பு
x

சென்னை மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர் விடுதியை இடமாற்றம் செய்ய மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை

60 ஆண்டுகள் பழமை

சென்னை பாரிசில், சென்னை மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதி கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை கடந்த 1959-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி காமராஜர் திறந்து வைத்தார். மொத்தம் 342 அறைகள் கொண்ட இந்த விடுதியில் 430 பேர் தங்கும் வகையில் இடவசதி உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், 4.24 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நீதித்துறைக்கு ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடம் கட்ட உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவிற்கு சென்னை மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தார். பின்னர், தலைமை செயலகத்தில் நில நிர்வாகத்துறை சார்பில் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், சென்னை மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதியை, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பகுதியில் ரூ.130 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 18 மாதங்களில் இந்த விடுதியை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விடுதி இடமாற்றத்திற்கு முதுகலை மருத்துவ மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கருத்து கேட்கவில்லை

இதுகுறித்து, சென்னை மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் கூறியதாவது:-

விடுதியை இடமாற்றம் செய்வது எங்களுக்கு செலவை அதிகரிக்கும். நோயாளியை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்படும். இந்த இடமாற்றம் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் அவதி அடைவார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து வரும் அவசர அழைப்புகள் மீது உடனடியாக சேவை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story