மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவு; வக்கீல் கைது
ஒடிசா ரெயில் விபத்து விவகாரத்தில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை:
ஒடிசா ரெயில் விபத்து விவகாரத்தில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
கருத்து பதிவிட்ட...
ஒடிசாவில் சமீபத்தில் நடந்த ெரயில் விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
நாட்டை உலுக்கிய இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் விபத்து நடந்த போது அங்கு பணியாற்றிய இஸ்லாமியர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இவரை விசாரிக்க வேண்டும் என சாமியார்மடம் அருகில் உள்ள பருத்திவிளையை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் (வயது 52) என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
வக்கீல் கைது
இதை பார்த்த தக்கலை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வக்கீலின் பதிவு மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் செந்தில்குமார் வீட்டுக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.