சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் விரைவில் பணியாளர்கள் நியமனம்; காந்திராஜன் எம்.எல்.ஏ. தகவல்
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று காந்திராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.
வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 100 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ. எஸ்.காந்திராஜன் தலைமை தாங்கி, 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையில் ரூ.15 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது வாய்க்கால் மூலம் தண்ணீர் எடுத்து விடப்பட்டுள்ளது. வாய்க்கால் ஓரங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்லும். அதேபோல் விவசாய பாசனத்திற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படும்.
இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அணையின் ஷட்டர்கள் பெயிண்ட் அடித்தும் மற்றும் மராமத்து பணி செய்தவுடன் அணையில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் அடுத்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் வேடசந்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவிதா பார்த்திபன், வேடசந்தூர் ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கார்த்திகேயன், நகர செயலாளர்கள் கார்த்திகேயன் (வேடசந்தூர்), தமிழன் பழனிசாமி (எரியோடு), இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், வேடசந்தூர் நகர பிரமுகர் பெருமாள், கால்நடைத்துறை இணை இயக்குனர் முருகன், உதவி இயக்குனர்கள் திருவள்ளுவர், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.