மனைவியின் படத்தை பதிவிட்டு அவதூறு; கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
நாகையில், மனைவியின் படத்தை முகநூலில் பதிவிட்டு அவதூறு பரப்பிய கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையில், மனைவியின் படத்தை முகநூலில் பதிவிட்டு அவதூறு பரப்பிய கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம்
நாகை அருகே உள்ள பொரவாச்சேரியை சேர்ந்தவர் உமர்பாரூக்(வயது 42). இவருக்கும், நாகையை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்தின் போது 40 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவை உமர்பாரூக்குக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மனைவியின் படத்தை பதிவிட்டு அவதூறு
இந்த நிலையில் உமர்பாரூக்கின் வீட்டின் மேல் மாடி பகுதியை ரூ.12 லட்சத்தில் கட்டித்தரும்படி மனைவி குடும்பத்தினரிடம் உமர்பாரூக் கேட்டதாக தெரிகிறது. இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, மனைவியை பெற்றோர் வீட்டிற்கு உமர்பாரூக் அனுப்பி வைத்தார். பின்னர் உமர்பாரூக் வெளிநாடு சென்று விட்டார்.அங்கிருந்தவாறே அவர், தனது நண்பரான பொரவாச்சேரியை சேர்ந்த முகமது ரியாஸ்(28) என்பவருடன் சேர்ந்து போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் புகைப்படத்தை பதிவு செய்து படத்தின் கீழ் பகுதியில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
கணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
இதனை எதேச்சையாக பார்த்த அந்த பெண் இதுகுறித்து நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உமர்பாரூக், முகமதுரியாஸ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.