ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனை


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனை
x

திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

குளிர்பானம் குடித்த மாணவன்

களியக்காவிளை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட படந்தாளுமூடு அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவருடைய மனைவி சோபியா. இவர்களுடைய மகன் அஸ்வின் (வயது 11). இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வினுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவனது பெற்றோர் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் திராவகம் கலந்த திரவத்தை குடித்திருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்திருப்பதாக கூறினர். இதையடுத்து சிறுவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது அஸ்வின் பெற்றோரிடம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வரும்போது பள்ளி சீருடையில் வந்த மற்றொரு மாணவர் ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க வற்புறுத்தியதாகவும், அதனால் தான் குடித்ததாகவும் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை

அந்த குளிர்பானத்தில் த்ிராவகம் கலந்து இருக்கலாம் என்று அவரது பெற்றோர் சந்தேகிக்கிறார்கள்.இது குறித்து அஸ்வின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஸ்வினின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானது. மாலையில் அஸ்வின் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவன் அஸ்வின் உடல், பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. உடன் உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனை முழுவதும் கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. அஸ்வின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகம் நேற்று காலையில் இருந்து இரவு வரை பரபரப்புடன் காட்சி அளித்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அஸ்வின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார், அஸ்வின் உறவினர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலெட்சுமி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அஸ்வின் உறவினர்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் அஸ்வின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

டி.ஜி.பி. உத்தரவு

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

மாணவன் இறந்த விவகாரம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் இறந்து போனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார்தான் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு வழிகாட்டுதல் உள்ளது. அதனால்தான் மாணவர் இறந்துபோன இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியிருக்கிறோம். இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார் என்றார்.

எனவே மாணவன் அஸ்வின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை விரைவில் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திராவகம் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார்? என்று இன்னும் தெரியாமல் உள்ளது. எனவே பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story