மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
உடுமலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகைக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் உடுமலை பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை காந்திநகர் எதிரே நாராயணன் காலனி பகுதியின் முன்பு 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டங்களை தயாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து, மக்கள் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தத்தொடங்கிய பிறகு மண்பாண்டம் விற்பனை குறைந்தது.
இதைத்தொடர்ந்து உடுமலையில் ஒரே இடத்தில் மண்பாண்டங்களை செய்து வந்த தொழிலாளர்கள் பல்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். இந்த நிலையில் சமீப காலமாக பொதுமக்கள் சிலர் மண்பாண்டங்கள் பயன்பாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.
மண்பானை
இதைத்தொடர்ந்து இப்போது எஸ்.வி.புரம், பள்ளபாளையம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் தயாரிக்கும்பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இந்த மண்மூலம் பொங்கல்பானை, அடுப்பு, வடச்சட்டி, பூந்தொட்டி, பூவோடு போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
அந்தந்த விசேஷ காலத்திற்கு தேவைப்படும் மண்பாண்டங்களை தயாரிக்கின்றனர். கோவில் திருவிழாக்களின் போது பூவோடு விற்பனையும், வெயில் காலத்தில் மண்பானை, மண்குடம் விற்பனையும் அதிகம் இருக்கும். இவற்றை உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தயாரிப்பு பணி தீவிரம்
இப்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பொங்கல் வைப்பதற்கான மண்பானை விற்பனை அதிகம் இருக்கும். அதற்காக இப்போது இந்த பொங்கல் மண்பானைகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மண்ணை பசை போன்று பதப்படுத்தி, அதை சுழலும் சக்கரத்தின் மூலம் பானையை உருவாக்கி, அதன் பிறகு கீழ்பகுதியை கைகளால் அடைத்து, பிசிறுகள் இல்லாமல்பானைக்கு முழு உருவம்கொடுக்கப்படுகிறது. அந்த பானை நன்றாக காய்ந்தபிறகு அதற்கு வர்ணம் (கலர்) கொடுத்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே பொங்கல் மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி பெற்று குளங்களில் இருந்து மண் எடுத்து வாகனத்தில் கொண்டு வந்து மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறும்போது இந்த மண்பாண்டம் செய்வதற்குத்தேவையான மண்ணை தேவைப்படும் போது வழங்க வேண்டும். குளங்களில் இருந்து மண் எடுத்துவருவதற்கு ஆட்கள் கூலி, வாகன வாடகை ஆகிய செலவுகள் அதிகம் ஆகிறது. அதனால் இந்த தொழிலுக்கு அரசு தேவையான நிதி உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.