2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு


2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை

காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

கள ஆய்வு

சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டை பகுதியில் கள ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பானை ஓட்டில் கீறல் தெரிந்தது. கள மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்ததில் அது தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு என்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக காளிராஜா கூறியதாவது:- காளையார்கோவில் கானப்பேர் என்றும் கானப்பேரெயில் என்றும் இலக்கியங்களில் வழங்கப்படுகிறது. ஐயூர் மூலங்கிழார் எழுதிய புறநானூற்று பாடல் 21, கானப் பேரெயில் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போல பதுங்கி இருந்து பகைவரை தாக்கும் எயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட காப்புக்காடுகளையும் உடையது என்கிறது.

பாண்டியர் காலம்

தற்போதும் பாண்டியன் கோட்டை கோட்டைகளுக்கான இலக்கணத்தோடு எச்சமாய் மண் மேடாய் காட்சி தருகிறது. வட்ட வடிவிலான இக்கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. கோட்டையின் நடுவில் நீராவி குளமும் உள்ளது. 37 ஏக்கரில் இக்கோட்டை மேட்டுப்பகுதியாக காணப்படுவதோடு இதன் அருகே உள்ள ஊரும் மேட்டுப்பட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் முத்து வடுகநாதர் மற்றும் மருது பாண்டியர் காலத்தில் நாணய சாலையாக பயன்படுத்தப்பட்டதாக கூறுவர். நான்கு பக்கங்களிலும் வாயிலை கொண்ட கட்டிடம் ஒன்று சிதைந்த நிலையில் இன்றும் உள்ளது. அதன் கிழக்கு வாயில் தரைத்தளத்தில் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

புறநானூறு குறிப்பிடுகிறபடி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயில் கடந்த உக்கிர பெருவழுதி தொடங்கி, காளையார் கோவில் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 13-ம் நூற்றாண்டில் பணியாற்றிய பாண்டிய அரசு அலுவலர்களின் பெயர்கள் 18 பெயர் குறிப்பிடப்படுவதால் இவ்வூர் பாண்டியர்களோடு நீண்ட காலம் தொடர்பில் இருந்ததை அறிய முடிகிறது.

பானை ஓடுகள்

பாண்டியன் கோட்டையில் மிகவும் பழமையான சங்ககால செங்கல் எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போன்ற கையால் செய்யப்பட்ட மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சிறுவர்கள் விளையாடும் வட்ட சில்லுகள், விலங்கு விரட்ட பயன்பட்ட சிறிய அளவிலான உருண்டைக்கல், பந்து போன்ற மண் உருண்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. இங்கு மண் அடுக்குகளும், பானை ஓட்டு எச்சங்களும், அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன. இங்குதான் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கருப்பு, சிவப்பு நிற பானை ஓட்டில் கருப்பிலும், சிகப்பிலும் எழுத்து பொறிப்பு காணப்படுகிறது. அதில், மோ, ச, ர, ப, ன் ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன. இந்த இடத்தில் அகழாய்வை தமிழக அரசு மேற்கொண்டால் பழமையான தொன்மையும், பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களும் வெளிப்படும். இந்த தமிழி எழுத்து பொறித்த பானை ஓட்டை அதன் தொன்மையும், பெருமையும் பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க சிவகங்கை தொல்நடைக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் நரசிம்மன் உடன் இருந்தார்.


Next Story