உருளைக்கிழங்கு அறுவடை தீவிரம்


உருளைக்கிழங்கு அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 15 May 2023 12:45 AM IST (Updated: 15 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உருளைக்கிழங்கு சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர்.

கவலை

இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மேலும் தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நஷ்டம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காய்கறி மண்டிகளில் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதை நம்பி பெரும்பாலான விவசாயிகள் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை சாகுபடி செய்து வந்தோம். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.32 மட்டுமே கிடைக்கிறது. மேலும் நல்ல விதை கிழங்குகள் கிடைக்காததாலும், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி குறைந்ததாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story